ரிவால்டோ யானை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது


ரிவால்டோ யானை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது
x
தினத்தந்தி 2 Aug 2021 10:45 PM IST (Updated: 2 Aug 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே மரக்கூண்டில் அடைத்து சுவாச பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ரிவால்டோ யானை, மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது. அதனை ரேடியோ காலர் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கூடலூர்,

மசினகுடி அருகே மரக்கூண்டில் அடைத்து சுவாச பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ரிவால்டோ யானை, மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது. அதனை ரேடியோ காலர் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சுவாச பிரச்சினைக்கு சிகிச்சை

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்று அழைக்கப்படும் காட்டுயானை முகாமிட்டு வந்தது. மேலும் சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தது. இதனால் ரிவால்டோ யானையை பிடித்து, முதுமலையில் வைத்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். மேலும் அதற்கான பணிகளை தொடங்கினர்.

பின்னர் கடந்த மே மாதம் வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டு அமைத்து, அதில் அந்த யானையை பிடித்து வனத்துறையினர் அடைத்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையில் யானையை வனத்தில் விடுவது குறித்து கால்நடை டாக்டர்கள் உள்பட பல தரப்பினர் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்தது. 

அதனடிப்படையில் யானையை வனத்தில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானையை தொலைதூர வனத்தில் விட ஆலோசித்து வந்தனர்.

அடர்ந்த வனத்தில்...

இந்த நிலையில் தமிழக வனத்துறை முதன்மைச்செயலாளர் சுப்ரியா சாகு, தலைமை வார்டன் சேகர் நீரஜ் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு மரக்கூண்டில் இருந்த ரிவால்டோ யானையை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தனர். 

பின்னர் லாரியில் ஏற்றி சிக்கல்லா அடர்ந்த வனப்பகுதியில் காலை 9.30 மணிக்கு விடுவித்தனர். மேலும் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு உள்ளதால், அதன் மூலம் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதில் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் உள்பட வனச்சரகர்கள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

ரேடியோ காலர்

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறியதாவது:- காட்டு யானையை பிடித்து மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து விட்டு மீண்டும் வனத்தில் விடுவது முதல் முறை. தற்போது யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. இதை கருத்தில் கொண்டும், ஊருக்கு வராமல் இருக்கவும் சுமார் 35 கி.மீட்டர் தூரமுள்ள சிக்கல்லா அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. 

இங்கு யானை வாழ்வதற்கான அனைத்து வளங்களும் உள்ளது. இதனால் பொதுமக்கள் வாழும் ஊருக்குள் வர வாய்ப்பில்லை. யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு உள்ள ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story