காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம்
கோவில்பட்டியில் காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி கோவில்பட்டியில் காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், கோவில்பட்டி நகர தலைவர், கோவில்பட்டி, கயத்தாறு வட்டார தலைவர்கள் பதவி நீக்கத்தினை கண்டித்தும், நேரு, இந்திராகாந்தி படத்தினை போடாமல் தவிர்க்கும் மாவட்ட தலைவர் காமராஜை கண்டித்தும் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷம்
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், காந்திசிலை முன்பு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மண்எண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் நகர தலைவர் சண்முகராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் ரமேஷ்மூர்த்தி (கோவில்பட்டி), செல்லத்துரை (கயத்தாறு), நகர துணை தலைவர் பங்காருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செம்புக்குட்டி, கயத்தாறு ஒன்றிய துணை தலைவர் கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்ட துணை தலைவர் திருப்பதிராஜா போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story