ஆம்பூர் அருகே திடீர் பழுது காரணமாக நடுவழியில் நின்ற சரக்கு ரெயில்


ஆம்பூர் அருகே திடீர் பழுது காரணமாக நடுவழியில்  நின்ற சரக்கு ரெயில்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:21 PM IST (Updated: 2 Aug 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே திடீர் பழுது கரணமாக சரக்கு ரெயில் நடுவழியில் நின்றது. சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு பழுது சரிசெய்யப்பட்டு புறப்பட்டு சென்றது.

ஜோலார்பேட்டை

நடுவழியில் நின்ற சரக்கு ரெயில்

ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு 65 பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில் ஒன்று இரும்பு பொருட்களை ஏற்றிகொண்டு வந்தது. நேற்று காலை சுமார் 10.55 மணியளவில் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் அருகே வந்த போது 2 பெட்டிகள் இடையே உள்ள வேக்கம் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் திடீரென ரெயில் நடுவழியில் நின்றது.

இதனால் சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் என்.எஸ்.மீனா, உதவி டிரைவர் இமல் விஜயன் மற்றும் கார்டு தனஞ்செயன் ஆகியோர் பழுதை சரிசெய்ய முயற்சி செய்தனர். ஆனால் சரிசெய்ய முடியவில்லை. இதுகுறித்து விண்ணமங்கலம் ரெயில் நிலைய அதிகாரி ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

1½ மணி நேரத்திற்கு பிறகு...

அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ஊழியர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி 12.15 மணியளவில் ஓரளவு பழுதை சரிசெய்தனர். அதன்பிறகு அங்கிருந்து மெதுவாக விண்ணமங்கலம் ரெயில் நிலையத்திற்கு ரெயிலை ஓட்டிவந்தனர். பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட என்ஜினீயர்கள் மூலம் சரிசெய்யும் பணிநடந்தது. மதியம் 2.25 மணியளவில் சரிசெய்யப்பட்டு அதன் பிறகு ஜோலார்பேட்டை நோக்கி சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.

Next Story