திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு மீட்டு ஒப்படைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் 3 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 204 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பஞ்சமி நிலம் அனைத்தும் தற்போது ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. எனவே ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கொடுத்த மனுவில், வருகிற 15-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். அதுபற்றி 7 நாட்களுக்கு முன்பே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கிராமசபை கூட்டத்தை வீடியோ, புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
ஆலை தொழிலாளர்கள் மனு
மேலும் திண்டுக்கல் அருகே தனியார் ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள ஆலையில் 300 பேர் வேலை செய்தோம். கடந்த 1995-ம் ஆண்டு திடீரென ஆலை மூடப்பட்டதால், அனைவரும் வேலையிழந்தோம். அந்த ஆலையின் எந்திரங்கள், கட்டிடம் ஜப்தி செய்யப்பட்டது. இதற்கிடையே 7 தொழிலாளர்களுக்கு மட்டுமே பணிக்கொடை வழங்கப்பட்டது. மீதமுள்ள தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை. எனவே, பணிக்கொடை பெற்று தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
பா.ஜனதா கட்சியினர் கொடுத்த மனுவில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபடம் வைக்க வேண்டும். பெரியபள்ளப்பட்டி அன்னசமுத்திர குளத்தை தூர்வாரி மழைநீரை சேமிப்பதோடு, குளக்கரையில் நடைபாதை அமைக்க வேண்டும். பள்ளபட்டி எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
திண்டுக்கல் சீலப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள், தங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக்கோரி, டிஜிட்டல் பேனரில் கோரிக்கையை அச்சிட்டு எடுத்து வந்தனர். பின்னர் கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story