நெல்லையில் இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம்
நெல்லையில் இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில், நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடி அமாவாசை திருவிழா, ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு, தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்து முன்னணியினர் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் 5 பேரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அழைத்து சென்றனர். பின்னர் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இந்து கோவில்களில் மட்டும் பக்தர்களுக்கு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பிற மதத்தினர் வழக்கம்போல் விழாக்களை நடத்துகின்றனர். பிற வழிபாட்டு தலங்களில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஏராளமானோர் கூடி வருகிறார்கள். இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். அப்போது அவர், அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். ஏற்கனவே அறிவித்துள்ள 3 கோவில்கள் தவிர மற்ற கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டிற்கு எந்த இடையூறும் செய்யப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சிவா, மாநில பேச்சாளர் காந்திமதிநாதன், பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், செயலாளர் சுடலை, செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம், சங்கர், நமசிவாயம், இந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவர் காசிமுருகன், உழவாரப்பணி பக்தர் பேரவை மாநகர பொறுப்பாளர் ராஜகோபால், அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன், பா.ஜனதா குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story