போலீசாரை தாக்கியதால் ஆப்பிரிக்க வாலிபர்கள் மீது தடியடி; போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேட்டி
போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் ஆப்பிரிக்க வாலிபர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், திட்டமிட்டு போலீஸ் நிலையம் முன்பு ஆப்பிரிக்க வாலிபர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் ஆப்பிரிக்க வாலிபர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், திட்டமிட்டு போலீஸ் நிலையம் முன்பு ஆப்பிரிக்க வாலிபர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
சி.ஐ.டி. போலீசுக்கு தகவல்
பெங்களூரு ஹெண்ணூர் அருகே பாபுஷாப் பாளையாவில் 2 பேர் போதைப்பொருட்கள் விற்க முயற்சிப்பதாக ஜே.சி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த நபர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அங்கு சென்ற போது ஸ்கூட்டரில் சுற்றிய 2 பேர் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவர் பிடிப்பட்டார். அவரிடம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், கைது செய்யப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த வாலிபர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மணிநேரம் சிகிச்சை பெற்ற அவர் பலியானார். அவரை போலீசார் தாக்கவில்லை. என்றாலும், போலீஸ் நிலையத்தில் வைத்து வாலிபர் பலியானதால் உடனடியாக சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாலிபர் வெளிநாட்டுக்காரர் என்பதால், அவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் விசாரித்தோம்.
போலீசாரை தாக்கியதால்...
அவர் காங்கோ நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவரது விசா 2017-ம் ஆண்டில் நிறைவு பெற்றும் சட்டவிரோதமாக தங்கி இருந்துள்ளார். போலீஸ் நிலையத்தில் வைத்து வெளிநாட்டு வாலிபர் பலியானதால், இந்த விவகாரம் குறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 176 சட்டப்பிரிவின்படி அந்த வாலிபரின் உடல் 2 டாக்டர்கள், மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெண் போலீசாருடனும், பிற போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு போலீசாரும் தாக்கப்பட்டுள்ளார். இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
திட்டமிட்டு வன்முறை
இந்த விவகாரம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்காரர்கள் தான். பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தார்களா?, போதைப்பொருட்கள் விற்பனை செய்தார்களா? உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு, சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூருவில் கடந்த 7 மாதத்தில் போதைப்பொருட்கள் விற்றதாக 96 வெளிநாட்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்கள் விற்பனைக்கு போலீசார் இடையூறாக இருப்பதாக நினைத்து, திட்டமிட்டு போலீஸ் நிலையம் முன்பாக குவிந்து போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டு இருக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.
Related Tags :
Next Story