குழித்துறை ஆற்றில் மிதந்த ஆண், பெண் சடலங்கள்- பரபரப்பு


குழித்துறை ஆற்றில் மிதந்த ஆண், பெண் சடலங்கள்- பரபரப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 2:58 AM IST (Updated: 3 Aug 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறையில் ஆற்றில் ஆண்-பெண் பிணங்கள் மிதந்து வந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களியக்காவிளை:
குழித்துறையில் ஆற்றில் ஆண்-பெண் பிணங்கள் மிதந்து வந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்றில் பிணங்கள்
குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் பழைய பாலம் உள்ளது. இதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாலங்களுக்கு இடையே நேற்று தண்ணீரில் இரண்டு பிணங்கள் மிதந்து வருவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி பிணங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 
பிணமாக மிதந்தவர்கள் ஆண்-பெண் என்பது தெரிய வந்தது. ஆணின் பிணம் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. அதே நேரத்தில் பெண்ணின் பிணம் அழுகாமல் இருந்தது. 
தனித்தனி சம்பங்கள்
பெண்ணின் உடலில் ஒரு பர்சு இருந்தது. அதில் இரண்டு ஆண்களின் புகைப்படம் மற்றும் பயணச்சீட்டுகள் இருந்தன.  பிணங்களை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனை செய்த போது ஆண் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் எனவும், பெண் நேற்று முன்தினம் இறந்ததும் தெரிய வந்தது. இதனால், இருவரும் இறந்தது தனித்தனி சம்பவங்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அடையாளம் தெரிந்தது
தொடர்ந்து பெண்ணின் உடலில் இருந்த பர்சு மற்றும் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கொல்லங்கோடு பாத்திமாநகரை சேர்ந்த நெல்சன் மனைவி கமலம் (வயது65) என்பது தெரிய வந்தது. இவரது கணவர் நெல்சன் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். கமலம் நெய்யூரில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வெட்டுமணியில் உள்ள குருசடிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 
இந்தநிலையில், நேற்று அவர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதனால், அவர் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
மேலும், பிணமாக கிடந்த ஆண் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story