லாரியில் கடத்திய ரூ.8 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் இருந்து புளியங்குடிக்கு லாரியில் கடத்திய ரூ.8 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்குளம் ஊரை சேர்ந்தவர் செங்கான் (வயது 52). இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பதாக மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் முள்ளிக்குளத்தில் உள்ள செங்கானுக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த குடோனில் லாரியில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை மூட்டைகள் இறக்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு சேலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை முட்டைகளையும், லாரியையும் மடக்கி பிடித்தனர்.
புகையிலை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி டிரைவர் நடராஜன் (45), கிளீனர் கோவிந்தராஜ் (22) மற்றும் செங்கான் ஆகியோரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். செங்கானிடம் இருந்து புகையிலை வாங்குவதற்காக வந்திருந்த கடையநல்லூரை சேர்ந்த முத்துக்குமார் (32), துரை (42) ஆகியோரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும். அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் ரூ.12 லட்சமும் கைப்பற்றப்பட்டது. மேலும் புகையிலை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஒரு வேன், லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story