தடுப்பூசி போட்டாலும் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்


தடுப்பூசி போட்டாலும் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Aug 2021 3:03 AM IST (Updated: 3 Aug 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி, சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுேம கொரோனா 3-வது அலையை தவிர்க்க முடியும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

நாகர்கோவில்:
தடுப்பூசி, சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுேம கொரோனா 3-வது அலையை தவிர்க்க முடியும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
தொடக்க நிகழ்ச்சி
குமரி மாவட்ட பொதுசுகாதாரத்துறை, தனியார் நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு கலைப்பயண பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பிரசார வாகனத்தை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து கூறியதாவது:-
கொரோனா 3-வது அலையை தடுக்கும் விதமாக ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் பல்வேறு துறைகள் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அடிப்படையில் குமரி மாவட்டத்தில் இன்று (நேற்று) முதல் 4 நாட்கள் விழிப்புணர்வு கலைப் பயணம் நடக்கிறது. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது கலைப் பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் முக்கிய நோக்கம்.
3-வது அலையை தவிர்க்க...
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை சுமார் 8 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 
மாற்றுத்தினாளிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. வெளியிடங்களுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் நன்கு கை கழுவ வேண்டும். தடுப்பூசி செலுத்துதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே கொரோனா 3 -வது அலையை தவிர்க்க முடியும்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
தொடர்ந்து கலைமாமணி பழனியாபிள்ளையின் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ்டேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சூரிய நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story