2 வீடுகளின் பூட்டை உடைத்து 11¾ பவுன் நகை திருட்டு
பெரம்பலூரில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு, 2 வீடுகளின் பூட்டை உடைத்து 11¾ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
பெரம்பலூர்:
தனியார் பள்ளி ஆசிரியர்
பெரம்பலூர்- வடக்கு மாதவி ரோடு முல்லை நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 30). தனியார் பள்ளி ஆசிரியரான இவர் வீட்டை பூட்டிவிட்டு, கடந்த 31-ந்தேதி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
பின்னர் அவர் நேற்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 6¾ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன.
லாரி உரிமையாளர்
இதேபோல் பெரம்பலூர்- வடக்கு மாதவி ரோடு ராஜீவ் நகரை சேர்ந்தவர் சரவணன்(39). லாரி உரிமையாளரான இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 31-ந்தேதி நாமக்கல் மாவட்டம் எருமைபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டிற்கு நேற்று மாலை சரவணன் வந்து பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதேபோல் பெரம்பலூர்- வடக்கு மாதவி ரோடு எம்.ஆர். நகரை சேர்ந்த பகுத்தறிவு (44) என்பவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு ஜோடி வெள்ளி கொலுசை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். திருட்டு சம்பவங்கள் தொடர்பான புகார்களின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story