கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர் பிரசாரம்


கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர் பிரசாரம்
x
தினத்தந்தி 3 Aug 2021 3:21 AM IST (Updated: 3 Aug 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை கலெக்டர் கோபால சுந்தரராஜ் தொடங்கி வைத்தார்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர் பிரசார தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- 

ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து துண்டுபிரசுரங்கள், சிற்றேடுகள், டுவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடை வீதிகள், ெரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வியாபாரிகள் நல சங்கங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், மாணவர்களுக்கிடையே குறும்பட போட்டிகள், ஓவியப் போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 

கிராம அளவில், வார்டு அளவில், மண்டல அளவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கவுரவித்து பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்ட உடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனாவை முற்றிலும் அகற்ற உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வெங்கட்ராமன், துணை இயக்குனர் டாக்டர் அருணா, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story