

வீடு வாங்கி தருவதாக...
திருவள்ளூர் அகரம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). இவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடு வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதையறிந்த திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், கண்ணையா நகர், சம்மந்தனார் தெருவை சேர்ந்த பவுல்ராஜ் (54) என்பவர் தன் மனைவி ஞானரோஸ்லின் என்பவருடன் கண்ணனை நாடி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தனது உறவினர்கள் பெரிய பதவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கண்ணனிடம் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட பவுல்ராஜ் தன் மனைவியுடன் சேர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வழங்கியதைப் போல போலியான குடியிருப்பு அனுமதி சீட்டு மற்றும் மாற்று இடம் வழங்கிட அடையாள சீட்டு ஆகியவற்றை தயார் செய்து கண்ணனிடம் கொடுத்துள்ளனர்.
ரூ.15 லட்சம் மோசடி
அதைப் பெற்றுக்கொண்ட கண்ணன் விசாரித்தபோது, அது போலியான அனுமதி சீட்டு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதேபோல கணவன்-மனைவி இருவரும் கூட்டு சேர்ந்து மேலும் 5 பேரிடம் வீட்டு வசதி வாரியத்தில் வீடு
வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.15 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர் மற்றும் சூரியகுமார், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த பவுல்ராஜை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மனைவி ஞானரோஸ்லினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.