பேரூர் நொய்யல் படித்துறை பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது
பேரூர் நொய்யல் படித்துறை பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது
பேரூர்
ஆடிப்பெருக்கையொட்டி வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டதால் பேரூர் நொய்யல் படித்துறை பகுதி பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பேரூர் நொய்யல் படித்துறை
ஆடிப்பெருக்கின் போது கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், கோவையை அடுத்த பேரூர் நொய்யல் படித்துறைக்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
அங்கு, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணபூஜை மற்றும் கன்னிமார் வழிபாடு நடத்துவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கிற்கு முந்தைய நாள் இரவே, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், பேரூர் கோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் வந்து தங்குவார்கள்.
வழிபாடு நடத்த தடை
அவர்கள் அதிகாலையில் பேரூர் நொய்யல் நதிக்கரைக்கு சென்று திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவார்கள்.
தற்போது, கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பேரூர் நொய்யல் படித்துறையில் திதி மற்றும் தர்ப்பண பூஜை, சப்த கன்னிமார் வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் பேரூர் நொய்யல் படித்துறையில் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இது போல் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் பகுதியும் ஆட்கள் நடமாட்டம் இன்றி இருந்தது.
மேலும் நொய்யல் படித்துறை பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது.
பக்தர்கள் ஏமாற்றம்
இதன் காரணமாக நொய்யல் ஆற்று பாலத்தின் மீது நின்றும், ரோட்டோரத்திலும் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பக்தர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பேரூர் நொய்யல் ஆற்றில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும், கொரோனா காரணமாக வழிபாடு நடத்த முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story