திண்டுக்கல்லில் 2-வது தவணை தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்


திண்டுக்கல்லில் 2-வது தவணை தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Aug 2021 10:00 PM IST (Updated: 3 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் 2-வது தவணை தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 6 லட்சத்து 15 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது, இதனிடையே கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு பலர் காத்திருக்கின்றனர். ஆனால் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே கோவேக்சின் தடுப்பூசிகள் வருகின்றன. அதன்படி நேற்று மாவட்டத்துக்கு குறைந்த அளவில் கோவேக்சின் தடுப்பூசி வந்தது.
இதையடுத்து கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி மட்டும் நேற்று செலுத்தப்பட்டது. இதில் திண்டுக்கல்லை பொறுத்தவரை கமலாநேரு மருத்துவமனை, மரியநாதபுரம், பழனி ரோடு மற்றும் சவேரியார்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நகர்நல மையங்கள், ஒரு சிறப்பு முகாம் என மொத்தம் 4 இடங்களில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் மொத்தம் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதற்காக காலை 8 மணிக்கே பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு தடுப்பூசி இருப்புக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் 5 இடங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதேநேரம் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாமல் திரும்பி சென்றனர். அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story