10 ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய தாத்தா கைது குழந்தையின் உடலை ஆற்றில் வீசிய பெண்ணும் சிக்கினார்
திருக்கோவிலூர் அருகே 10 ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய தாத்தா கைது செய்யப்பட்டார். குழந்தையின் உடலை ஆற்றில் வீசிய பெண்ணும் போலீசிடம் சிக்கிக்கொண்டார்
திருக்கோவிலூர்
பள்ளி மாணவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவர் ஆதரவற்ற அவரது மகள் வழி பேத்தியான 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவி மற்றும் 17 வயது பேரன் ஆகியோரை தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார். முதியவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்ததாகவும், அவருக்கு மணம்பூண்டியை சேர்ந்த ராஜாமணி என்பவர் பிரசவம் பார்த்ததாகவும், பின்னர் அந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இறந்த குழந்தையை பெண்ணையாற்றில் வீசிவிட்டதாகவும் செல்லங்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி விமலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உடனடியாக விசாரணை நடத்தினார்.
3 ஆண்டுகளாக...
அப்போது மாணவிக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிய அவரது தாத்தா பேத்தி என்றும் பாராமல் கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.
கடந்த 30-ந்தேதி உள்ளூர் பகுதியை சேர்ந்த 65 வயது பெண் ஒருவரிடம் ரூ.15 ஆயிரம் கொடுத்து மாணவியை மணம்பூண்டி, காந்தி சாலையில் உள்ள ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் ராஜாமணி(70) என்பவரிடம் சிகிச்சைக்காக அழைத்து செல்லுமாறு தாத்தா கூறினார்.
அதன் பேரில் மாணவியை அந்த பெண் மணம்பூண்டியில் உள்ள ராஜாமணியின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு ராஜாமணி ஊசி போட்டு, மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
வயிற்று வலி
இதன் பின்னர் வீடு திரும்பிய மாணவிக்கு அன்று இரவு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து மீண்டும் அவரை ராஜாமணியிடம் அந்த பெண் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த மாணவியிடம் உனக்கு பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக அவரது தாத்தாவும், அந்த பெண்ணும், தெரிவித்தனர். பின்னர் ராஜாமணியின் ஆலோசனைப்படி இறந்த குழந்தையை அந்த பெண் ஒரு பையில் வைத்து எடுத்து சென்று ஆற்றில் வீசிவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
2 பேர் கைது
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விமல் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவழகி வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாத்தா மற்றும் உதவி செய்த பெண் ஆகியோரை கைது செய்தார்.
மேலும் இந்த சம்பவத்தை அறிந்த செவிலியர் ராஜாமணி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பேத்திக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிய தாத்தாவே அவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது வேலியே பயிரை மேய்ந்த கதையை போன்று நடந்த இந்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story