மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை அடித்துக்கொன்ற பெண்


மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை அடித்துக்கொன்ற பெண்
x
தினத்தந்தி 3 Aug 2021 10:43 PM IST (Updated: 3 Aug 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த வாலிபர் கோடரியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தாய் மற்றும் அவருடைய 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

குன்னூர் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த வாலிபர் கோடரியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தாய் மற்றும் அவருடைய 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பணம் கேட்டு தகராறு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு ஒசஹட்டி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி இந்திரா (வயது 44). இவர்களுக்கு ரொசாரியா (25), ஜான் பீட்டர் என 2 மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் இறந்துவிட்டார். இதனால் இந்திரா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் (47) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இந்திரா ராஜேந்திரன், மகன்கள் 2 பேருடன் வசித்து வந்தார்.

ரொசாரியாவுக்கு மது அருந்துவது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் மது போதையில் அடிக்கடி உறவினர்கள், மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரொசாரியா மது அருந்துவதற்காக தனது தாய் இந்திராவிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் இல்லை என தெரிவித்தார்.

கோடரியால் அடித்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த ரொசாரியா அங்கு கீழே கிடந்த கோடரியை எடுத்து தாயை தாக்க முயன்று உள்ளார். இதனைக்கண்ட ராஜேந்திரன், ரொசாரியா கையில் இருந்த கோடரியை பிடுங்கினார்.

பின்னர் ராஜேந்திரனும், இந்திராவும் சேர்ந்து கோடரியால் ரொசாரியாவை சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா, ராஜேந்திரன் ஆகியோர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

வாலிபர் ரத்த காயத்துடன் மயங்கி கிடப்பது குறித்து அக்கம் பக்கத்தினர் அருவங்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

 பின்னர் படுகாயம் அடைந்த ரொசாரியாவை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தாய் உள்பட 2 பேர் கைது

இதையடுத்து போலீசார் தப்பிச்சென்ற தாய் இந்திரா மற்றும் அவருடைய 2-வது கணவரை வலைவீசி தேடினர். இதற்கிடையில் அந்த பகுதியில் பதுக்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், மகன் அடிக்கடி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததும், குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் 2 பேரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

தொடர்ந்து போலீசார் மகனை கொலை செய்த தாய் இந்திரா, அவருடைய 2-வது கணவர் ராஜேந்திரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story