கோவில்களில் வழிபாடு சுற்றுலா மையங்களுக்கு தடை களை இழந்த ஆடிப்பெருக்கு விழா


கோவில்களில் வழிபாடு சுற்றுலா மையங்களுக்கு தடை களை இழந்த ஆடிப்பெருக்கு விழா
x
தினத்தந்தி 3 Aug 2021 10:45 PM IST (Updated: 3 Aug 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் வழிபாடு, சுற்றுலா மையங்களுக்கு தடை எதிரொலி யாக ஆடிப்பெருக்கு விழா களை இழந்தது. மாசாணியம்மன் கோவில் முன்பு நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

பொள்ளாச்சி

கோவில்களில் வழிபாடு, சுற்றுலா மையங்களுக்கு தடை எதிரொலி யாக ஆடிப்பெருக்கு விழா  களை இழந்தது. மாசாணியம்மன் கோவில் முன்பு நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

ஆழியார் அணை

பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆழியாறு அணை உள்ளது. அணை அருகில் பூங்கா, மீன் அருகாட்சியகம் அமைந்து உள்ளது. வழக்கமாக ஆடிப்பெருக்கையொட்டி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆழியாறுக்கு வருவது வழக்கம். 

புதுமண தம்பதிகள் உள்பட பலரும் குடும்பத்துடன் வந்து அணை, பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்து வார்கள். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு செல்ல கோவை மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 

வெறிச்சோடின 

இதனால் ஆடிப்பெருக்கான நேற்று ஆழியாறு அணை மற்றும் பூங்கா பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. 

அது போன்று குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்வதை தடுக்க வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  

மேலும் ஆழியாறு சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். தடையை மீறி செல்ல முயன்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

மாசாணியம்மன் கோவில்

ஆடிப்பெருக்கையையொட்டி  ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால், கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். 

அதுபோன்று பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலும் மூடப்பட்டதால், அங்கு சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

மேலும் ஆடிப்பெருக்கையையொட்டி கோவில்களில் வழிபாடு, சுற்றுலா மையங்களுக்கு தடை எதிரொலியாக ஆடிப்பெருக்கு விழா  களை இழந்தது

கன்னிமார் பூஜை 

கூட்டம், கூடுவதை தடுக்க ஆற்றில் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தடை உத்தரவை மீறி ஆடிப்பெருக்கையொட்டி பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாது,  பிற மாவட்டங்களில் இருந்தும் அம்பராம் பாளையம் ஆழியாற்றிற்கு வந்திருந்தனர். 

பின்னர் கன்னிமார் பூஜை செய்து வழிப்பட்டனர். அதை தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை ஒரு வாழை இலையில் வைத்து, கற்பூரம் ஏற்றி, ஆற்றில் விட்டனர். மேலும் புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்.

மேலும் சுற்றுலா மையமான டாப்சிலிப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சேத்துமடை சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகளை அவர்கள் திருப்பி அனுப்பினார்கள். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 


Next Story