தூத்துக்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கிடந்த நட்சத்திர ஆமைகள்
தூத்துக்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கிடந்த நட்சத்திர ஆமைகள்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் 24 நட்சத்திர ஆமைகள் கிடந்தன.
மன்னார் வளைகுடா
தூத்துக்குடி அருகே உள்ள மன்னார் வளைகுடா பகுதி அரிய வன உயிரினங்கள் அடங்கிய கடல் பகுதி ஆகும். கடந்த சில ஆண்டுகளாக பல உயிரினங்கள் அழிவின் பாதையில் சென்றதால், வனஉயிரின சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.தடை செய்யப்பட்ட உயிரினங்கள் வேட்டையாடுவது குற்றம் என்று மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
நட்சத்திர ஆமை
இந்த நிலையில் தூத்துக்குடியை அடுத்து வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரம் கடற்கரை பகுதியில் நட்சத்திர ஆமைகள் இறந்த நிலையில் கிடப்பதாக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வனச்சரகர் ரகுவரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு நன்னீரில் வாழக்கூடிய 24 நட்சத்திர கடல் ஆமைகள் இறந்த நிலையில் கிடந்தன. ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இதனை கைப்பற்றிய அதிகாரிகள் கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.
விசாரணை
இதுதொடர்பாக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நன்னீரில் வாழக்கூடிய ஆமைகள் கடற்கரையில் இறந்த நிலையில் கிடந்ததால் யாரேனும் கடத்தி செல்லும் போது கடலில் தவறி விழுந்து இறந்ததா? அல்லது இறந்த நிலையிலான ஆமையை கடற்கரையில் வீசி சென்றார்களா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story