மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.7¾ லட்சம் தங்க நகைகள் திருட்டு
உப்பள்ளி டவுனில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.7¾ லட்சம் தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
உப்பள்ளி: உப்பள்ளி டவுனில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.7¾ லட்சம் தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ரூ.7¾ லட்சம் நகைகள் திருட்டு
உப்பள்ளி டவுன் பஸ் நிலையம் அருகே கில்லா பகுதியில் வசிப்பவர் பிரசாந்த். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த், தனது குடும்பத்தினருடன் தார்வார் டவுனில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார்.
அப்போது பிரசாந்த் வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டு அலமாரியில் இருந்த ரூ.7.80 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது. அப்போது தான் வீட்டில் யாரோ மர்மநபர்கள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்றதை பிரசாந்த உணர்ந்தார். இதுகுறித்து அவர், உப்பள்ளி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய்கள் திருடு போன வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிநின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்த புகாரின்பேரில் உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் கில்லா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story