மண்டியாவில், 11 கல்குவாரிகளின் உரிமம் ரத்து


மண்டியாவில், 11 கல்குவாரிகளின் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 4 Aug 2021 3:03 AM IST (Updated: 4 Aug 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் அனுமதியின்றி செயல்பட்ட 11 கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மண்டியா: மண்டியாவில் அனுமதியின்றி செயல்பட்ட 11 கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 

கே.ஆர்.எஸ். அணையில் விரிசல்

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணையை சுற்றி ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க வைக்கும் வெடியின் அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிகளால் கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக சுமலதா எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இந்த விவகாரத்தில் சுமலதா எம்.பி., முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இடையே வார்த்தை மோதல் உண்டானது. மேலும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்குவாரிகளில் சுமலதா எம்.பி. ஆய்வும் செய்தார். 

11 கல்குவாரிகளுக்கு சீல் 

இந்த நிலையில் மண்டியா மாவட்ட கலெக்டர் அஸ்வதி தனது அலுவலகத்தில், கனிம வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது. 

அப்போது பாண்டவபுரா தாலுகாவில் 11 கல்குவாரிகள் உரிமத்தை புதுப்பிக்காமல் அனுமதியின்றி செயல்பட்டது தெரிந்தது. இதனால் அந்த கல்குவாரிகளுக்கு சீல் வைப்பது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 
இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணை அருகே உள்ள பேபி மலையில் செயல்பட்டு வரும் கல்குவாரி கடந்த சில தினங்களாக செயல்படாமல் உள்ளது. ஆனால் அந்த கல்குவாரியில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் கல்குவாரியில் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 10 டெட்டனேட்டர்கள், 11 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. அதை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.

Next Story