குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் வழங்குவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி; 4 பேருக்கு வலைவீச்சு
குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் வழங்குவதாக கூறி, மும்பையை சேர்ந்தவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு: குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் வழங்குவதாக கூறி, மும்பையை சேர்ந்தவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பழங்கால தங்க நாணயங்கள்
தாவணகெரே அருகே லோககெரே கிராமத்தை சேர்ந்தவர் அஜித்ராஜ். இவர் மராட்டிய மாநிலம் மும்பையில் பீடா கடை நடத்தி வருகிறார். அவர் கடையின் அருகே மும்பையை சேர்ந்த குலாப்சந்த் குப்தா என்பவரும் பீடா கடை நடத்தி வருகிறார். பக்கத்து கடைக்காரர்கள் என்பதால் அஜித்ராஜ், குலாப்சந்த் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் குலாப்சந்த்திடம், அஜித்ராஜ் என்னுடைய உறவினரிடம் பழங்கால தங்க நாணயங்கள் உள்ளது. உங்களுக்கு வேண்டும் என்றால் அதை குறைந்த விலைக்கு வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு குலாப்சந்த்தும் சம்மதம் தெரிவித்து இருந்தார்.
ரூ.5 லட்சம் மோசடி
இந்த நிலையில் தங்க நாணயங்களை வாங்குவதற்காக ரூ.5 லட்சத்தை எடுத்து கொண்டு குலாப்சந்த் தாவணகெரேவுக்கு வந்தார். அவரை தாவணகெரே புறநகர் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு அஜித்ராஜ் உள்பட 4 பேரும் அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை வாங்கி கொண்டனர். பின்னர் தங்க முலாம் பூசப்பட்ட நாணயங்களை குலாப்சந்த்திடம் கொடுத்து விட்டு 4 பேரும் சென்றனர்.
அந்த நாணயங்களை மும்பைக்கு கொண்டு சென்று குலாப்சந்த் சோதனை செய்த போது அது போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்க அஜித்ராஜை, குலாப்சந்த் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் பழங்கால தங்க நாணயங்கள் தருவதாக தன்னை ஏமாற்றி ரூ.5 லட்சத்தை அஜித்ராஜ் உள்பட 4 பேர் மோசடி செய்தது குலாப்சந்த்திற்கு தெரியவந்தது. உடனடியாக தாவணகெரே வந்த அவர் அஜித்ராஜ் உள்பட 4 பேர் மீது தாவணகெரே புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகிவிட்ட 4 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story