போலீசார் மீது தாக்குதல்; ஆப்பிரிக்க வாலிபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
பெங்களூருவில் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள ஆப்பிரிக்க வாலிபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட நைஜீரியா பெண்ணை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
பெங்களூரு: பெங்களூருவில் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள ஆப்பிரிக்க வாலிபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட நைஜீரியா பெண்ணை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
காங்கோ வாலிபர் சாவு
பெங்களூரு ஜே.சி.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் அதிகாலையில் போதைப்பொருள் விற்றதாக காங்கோ நாட்டை சேர்ந்த ஜான் என்ற ஜோயில் மலு என்பவரை கைது செய்திருந்தனர். அந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் வைத்து உடல் நலக்குறைவால் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தான், அவரை அடித்து கொலை செய்து விட்டதாக காங்கோ, நைஜீரியா, ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஜே.சி.நகர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெண் போலீசாரிடம் தரக்குறைவாக பேசியதுடன், போலீசார் ஒருவரையும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் தாக்கி இருந்தனர். இதனால் ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இந்த நிலையில், போலீஸ் நிலையத்தில் வைத்து உயிர் இழந்த ஜோயில் மலுவின் உடல் நேற்று பவுரிங் ஆஸ்பத்திரியில் 2 டாக்டர்கள் மற்றும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அவரது உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவரது உடலை காங்கோ நாட்டுக்கு எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை, ஆப்பிரிக்கா கூட்டமைப்பினர் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், ஜே.சி.நகர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் தர்மேந்திரகுமார் மீனா சென்றார். அங்கு வழக்கு சம்பந்தமாக அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு சில அறிவுரைகளை அவர் வழங்கினார். மேலும் போலீசாரை தாக்கிய ஆப்பிரிக்கர்களை உடனடியாக கைது செய்யும்படியும் போலீசாருக்கு, தர்மேந்திரகுமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.
3 தனிப்படை அமைப்பு
இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் தர்மேந்திரகுமார் மீனா நிருபர்களிடம் கூறுகையில், ஜே.சி.நகர் போலீஸ் நிலையம் முன்பு நடந்த கலாட்டா சம்பந்தமாக ஒட்டு மொத்தமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரை தாக்கியது, சப்-இன்ஸ்பெக்டர் லதாவிடம் தடியை பறித்து, அவரை தாக்க முயன்றதாக, லதா கொடுத்த புகாாின் பேரில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்பிரிக்க வாலிபர்கள் சிறுவன் மீது விழுந்ததால், காயம் அடைந்திருந்தான். அதுதொடர்பாகவும் ஒரு வழக்குப்பதிவாகி இருக்கிறது.
போராட்டம் மற்றும் போலீசாரை தாக்கியதாக ஏற்கனவே சில ஆப்பிரிக்க வாலிபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மேலும் சில வாலிபர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர், என்றார்.
5 பேரை கைது செய்ய தீவிரம்
இதற்கிடையில், ஜே.சி.நகர் போலீஸ் நிலையம் முன்பாக உள்ள கண்காணிப்பு கேமராக்கள், போராட்டத்தின் போது போலீசாரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மூலமாக போலீசாரை தாக்கிய 4 பேர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும் கலாட்டாவை தூண்டும் விதமாக நைஜீரியாவை சேர்ந்த ஒரு இளம்பெண் நடந்து கொண்டதும், அவரும் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.
அவர்களை கைது செய்ய ராமமூர்த்திநகர், பானசாவடி, ஆர்.டி.நகர், கொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்தும் ஜே.சி.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story