9 கிலோ தங்க நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்பட 2 பேர் கைது
ராமநகரில் போலி நகைகளை வைத்துவிட்டு, 9 கிலோ தங்க நகைகளை திருடிய மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு: ராமநகரில் போலி நகைகளை வைத்துவிட்டு, 9 கிலோ தங்க நகைகளை திருடிய மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி தங்க நகைகள்
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வங்கி உள்ளது. அந்த வங்கியின் மேலாளராக அனந்த்நாக் என்பவர் இருந்து வந்தார். இதற்கிடையில், வங்கியில் நீண்ட காலமாக பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகளை மீட்காமல் இருந்து வந்தனர். இதையடுத்து, அந்த தங்க நகைகளை ஏலம் விடுவதற்கு வங்கி அதிகாரிகள் முடிவு செய்தார்கள். அதைத்தொடர்ந்து, வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை சரிபார்த்தனர்.
அப்போது அங்கிருந்த பெரும்பாலான நகைகள் போலியானது என்று தெரிந்தது. அதாவது தங்க நகைகளை போல், கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த ராஜண்ணா என்பவர் தான் பொதுமக்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்கிவிட்டு, வங்கியில் போலி தங்க நகைகளை கொடுத்ததாக தகவல் வெளியானது.
வங்கி மேலாளர் கைது
இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தனர். அவர், இந்த மோசடியில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் அடகு வைத்திருந்த 9 கிலோ தங்க நகைகளை திருடிவிட்டு, அதற்கு பதிலாக போலியான நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள், பிற ஊழியர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.
இதையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில், வங்கி மேலாளர் அனந்த்நாக்கிடம் நடத்திய விசாரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதுடன், அவர் தான் 9 கிலோ தங்க நகைகளையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அனந்த்நாக், அவருக்கு உதவியதாக மண்டியாவை சேர்ந்த நகை வியாபாரியான ரஜனீஷ் ஆகிய 2 பேரையும் சாத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
5½ கிலோ நகைகள் மீட்பு
அதாவது வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகள் மீட்கப்படாமல் இருப்பது பற்றி அறிந்த அனந்த்நாக், அந்த தங்க நகைகளை லாக்கரில் இருந்து திருடி உள்ளார். அவற்றை ரஜனீசிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இவ்வாறு வங்கியில் இருந்த 9 கிலோ தங்க நகைகளையும் திருடி, அனந்த்நாக் விற்பனை செய்திருக்கிறார். அவ்வாறு கிடைத்த பணத்தில் பெங்களூருவில் ஒரு வீட்டுமனை வாங்கியதுடன், புதிதாக ஒரு வீட்டையும் கட்டி இருந்தார். விலை உயர்ந்தகாரை வாங்கி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.
கைதான 2 பேரிடம் இருந்து 5½ கிலோ தங்க நகைகள், ரூ.23 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அனந்த்நாக் வாங்கிய வீட்டுமனை, புதிய வீட்டின் ஆவணங்களையும் பறிமுதல் செய்திருப்பதாக ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் தெரிவித்துள்ளார். கைதான 2 பேர் மீதும் சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story