174 பேருக்கு ரூ.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்
‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ திட்டத்தில் 174 பேருக்கு ரூ.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.
தென்காசி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டங்களில் ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ என்ற தலைப்பில் ஒரு பெட்டி வைத்து அதில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கி போட்டு பூட்டி வைத்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, திருமணம் மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, புதிய ரேஷன் அட்டை, வெங்காய சேமிப்பு கூடம், சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி ஆகியவை வழங்கப்பட்டன. மொத்தம் 174 பேருக்கு ரூ.89 லட்சத்து 28 ஆயிரத்து 15 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story