குமரியில் மேலும் 2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்
குமரி மாவட்டத்தில் மேலும் 2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மேலும் 2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கலந்துரையாடல் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை, செண்பகசேகரபிள்ளை மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டாரம் வாரியாக விவசாயிகளின் குறைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் கால்வாய்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர் வாருதல், நீர்நிலை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற குறைகள் தீர்க்க விவாதிக்கப்பட்டது. அப்போது விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
பயிர் இழப்பீடு
குமரி மாவட்டத்தில் 6 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள நிலையில் மேலும் 2 இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், வாய்க்கால்கள், ஆறுகளை தூர் வார வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருப்பதிசாரத்தில் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்குள் மழை வெள்ளம் புகுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களில் கடன் வழங்கும்போது 15 மூடை உரம் வழங்கப்பட்டதாக செல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஆனால் 5 மூடை உரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் உண்மை நிலவரம் என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
ராதாபுரம் கால்வாய்
புதிய உழவர் சந்தைகளை தொடங்க வேண்டும். பட்ஜெட் தயாரிப்புக்காக குமரி மாவட்ட விவசாயிகளை இதுவரை அழைத்து பேசவில்லை. ராதாபுரம் கால்வாயில் 4½ மாதம் தண்ணீர் கொடுப்பது சாத்தியமில்லை என்பதால் வரக்கூடிய நாட்களில் அதனை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு விவசாயிகள் கருத்துக்கள் தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் பேசும் போது, நெல் அறுவடைக்கு முன்பாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஏற்பாடு செய்யப்படும். திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் மழையினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது:-
யூரியா உர தட்டுப்பாடு மாநிலம் முழுவதும் உள்ளது. குமரி மாவட்டத்துக்கு உரம் வந்ததும் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். குளம், வாய்க்கால்கள், ஆறுகளை தூர்வார டெண்டர் போடப்பட உள்ளது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கட்டாயம் இழப்பீடு கிடைக்கும். பட்ஜெட் தயாரிப்பு குறித்து விவசாயிகளுடன் நிதித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கருத்துக்களை கேட்க நெல்லைக்கு வரும்போது அங்கு குமரி மாவட்ட விவசாயிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள், என்றனர்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, வேளாண்மை இணை இயக்குனர் சத்தியஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் ஹனி ஜாய் சுஜாதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) சில்வஸ்டர் சொர்ண லதா, கூட்டுறவு சங்கங்களின் உதவி பொது மேலாளர் முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் பன்னீர்செல்வம், வேளாண் விற்பனைக்குழு செயலாளர் விஷ்ணப்பன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story