சேலத்தில் விளம்பர பலகை கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
சேலத்தில் விளம்பர பலகை கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலத்தில் விளம்பர பலகை கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை மிரட்டல்
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). இவர் கோரிமேடு பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கன்னங்குறிச்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் சரவணனை மறித்து மொபட்டுக்கான ஆவணங்களை காட்டுமாறு தெரிவித்தனர். ஆனால் அவரிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை.
இதனால் மொபட்டை பறிமுதல் செய்த போலீசார், ஆவணத்தை காட்டிவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று காலை 6.45 மணிக்கு பெரியார் மேம்பாலம் அருகே வந்த சரவணன் திடீரென அங்கிருந்த விளம்பர பலகை கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் வேதரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் அங்கு தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சரவணனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், போலீசார் தேவையில்லாமல் எனது மொபட்டை பறித்துக் கொண்டு தரமறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அவரிடம் போலீசார், கீழே இறங்கி வந்து உன்னுடைய மொபட்டை வாங்கி செல்லுமாறு கூறினர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சரவணன் கீழே இறங்கி வந்தார். மேலும் அவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொபட் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் சரவணன் தான் வக்கீல் என்றும், பின்னர் சிறிது நேரத்தில் ஆந்திராவில் உள்ள சட்டகல்லூரியில் படித்து வருவதாகவும் கூறினார். இதனால் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றோம் என்றனர்.
Related Tags :
Next Story