சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க நடவடிக்கை-அமைச்சர் சக்கரபாணி பேட்டி
சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
சங்ககிரி:
சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
தீரன் சின்னமலை
சங்ககிரி மலைஅடிவாரம் கோட்டை மற்றும் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு இடம் அமைந்துள்ளது. அங்கு நேற்று தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினம் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின்சுனேஜா, சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, சேலம் கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஆறுமுகம், சங்ககிரி ஒன்றிய பொறுப்பாளர் கே.எம்.ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
பேட்டி
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீரன் சின்னமலை சிறு வயதிலிருந்தே, சுதந்திரத்திற்காக போராடியவர். அவரது நினைவு தினம் அனைவராலும் போற்றப்பட வேண்டியது. சென்னையில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
தீரன் சின்னமலை வாழ்ந்த ஊரான ஓடா நிலையிலும் தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. தீரன் சின்னமலைக்கு சங்ககிரி நினைவு இடத்தில் சிலை வைப்பது குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வரலாற்று சிறப்புமிக்க சங்ககிரி மலைக்கோட்டையை புனரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story