செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை மடக்கி பிடிக்க முயன்ற நிலத்தரகருக்கு கத்திக்குத்து
திருவள்ளூர் மாவட்டம், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை மடக்கி பிடிக்க முயன்ற நிலத்தரகருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ளது ஏகுமதுரை கிராமம். இங்கு வசிப்பவர் நாகூர் (வயது 55), நிலத்தகரகர். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் வேலை செய்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளி மஜிந்தர் (21) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், மஜிந்தர் வீட்டின் வாசலில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். முக கவசம் அணிந்திருந்த அவர்கள் கத்திமுனையில் மஜிந்தர் கையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர். அப்போது மஜிந்தர் கூச்சலிட்டார். இதனைக்கண்ட வீட்டு உரிமையாளர் நாகூர் மற்றும் அவரது மகன் எடிசன் (21) ஆகியோர் மர்ம நபர்களை தடுத்து நிறுத்தி மடக்கி பிடிக்க முற்பட்டனர்.
இந்த நிலையில், நாகூரின் வயிற்றின் மேல் பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்த நாகூரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டது. போலீஸ் விசாரணையில் மர்ம நபர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பழைய குற்றவாளிகள் என்பதும், அதே பகுதியில் மேலும் 2 வடமாநில தொழிலாளர்களின் செல்போன்களை அவர்கள் பறித்து சென்றதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story