சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவுக்கு முறையான அழைப்பு விடுத்தும் அ.தி.மு.க. கலந்துகொள்ளவில்லை


சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவுக்கு முறையான அழைப்பு விடுத்தும் அ.தி.மு.க. கலந்துகொள்ளவில்லை
x
தினத்தந்தி 4 Aug 2021 7:50 PM IST (Updated: 4 Aug 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவுக்கு முறையான அழைப்பு விடுத்தும் அ.தி.மு.க. கலந்துகொள்ளவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை,

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

அவர்களுடைய விருப்பம்

கேள்வி:- சட்டமன்ற பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழாவில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பங்கேற்கவில்லை. முறையான அழைப்பு அனுப்பப்பட்டதா?.

பதில்:- விழாவில் கலந்துகொள்வதும் அல்லது கலந்துகொள்ளாததும் அவர்களுடைய விருப்பம். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை மேடையில் அமர வைக்கவேண்டும், அவர்களுடைய ஒத்துழைப்போடு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் நினைத்தார்.

கலந்துகொள்ளவில்லை

விழா நடத்த திட்டமிட்ட பொழுது முதல்-அமைச்சர் என்னை அழைத்து எதிர்க்கட்சி தலைவரை தொடர்புக்கொண்டு விழாவிற்கு வருகைதர வேண்டும் எனவும், ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் அமரும் வரிசையிலேயே தங்களுக்கும் இடம் ஒதுக்கப்படும் எனவும், தாங்கள் விழாவில் வாழ்த்துரைக்க வேண்டும் எனவும், எதிர்க்கட்சி தலைவரிடம் கூறுமாறு எனக்கு அறிவுரை வழங்கினார். நானும் அவ்வாறே அவரிடம் விவரங்களைக் கூறி அழைப்பு விடுத்தேன்.

அதற்கு அவர் அனைவரிடம் கலந்து ஆலோசித்து கூறுவதாக கூறினார். ஆனால், அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதை என்னிடம் கூறாமல் சட்டப்பேரவை செயலாளரிடம், நாங்கள் இவ்விழாவில் கலந்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கூறும் காரணம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் தி.மு.க. பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனர்.

உரிய மரியாதை

ஆனால், அவர்கள் மற்றவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவது போலவே எங்களுக்கும் அழைப்பு அனுப்பினர். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த எங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்பதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஆனால், நாங்கள் உரிய மரியாதையை அவர்களுக்கு அளிப்போம்.

கேள்வி:- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.

பதில்:- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டதை முழு மனதோடு வரவேற்கிறேன். அவரின் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன்.

தீர்ப்பை மதிக்க வேண்டும்

கேள்வி:- கர்நாடக முதல்-மந்திரி மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என கூறுகிறாரே?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பையும், நீதிமன்ற கருத்தையும் ஏற்கமாட்டோம் என கர்நாடக முதல்-மந்திரி கூறுவது ஏற்புடையது அல்ல. அவரின் தந்தை பொம்மை எங்கள் தலைவர் கருணாநிதியோடும், தமிழகத்தின் மீதும் பற்றும், நட்புறவும் கொண்டவர். அவருடைய வழியில் நட்புறணர்வோடு கர்நாடக முதல்-மந்திரி செயல்படுவார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story