தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் 2 ம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது
தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் 2 ம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை சென்னை ஐ.ஜி. பாஸ்கர், போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை சென்னை ஐ.ஜி. பாஸ்கர், போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடல் தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான உடல் தகுதி தேர்வு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
இந்த உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ள 999 பெண்கள் உள்பட 4,257 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆண்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் மற்றும் மார்பளவு ஆகிய உடல் தகுதி தேர்வுகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேர்வாளர்கள் அனைவரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.
ஐ.ஜி. நேரில் ஆய்வு
இந்த நிலையில் பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 500 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டம் மற்றும் உயரம் சரி பார்க்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து அவர்களது சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம் 212 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வு இன்றும் நடக்கிறது.
தர்மபுரியில் நடந்த 2-ம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை சென்னை பயிற்சி ஐ.ஜி. பாஸ்கர், சென்னை டி.ஜி.பி. அலுவலக போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனிடையே ஆண்களுக்கான 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் அவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் ஆகிய தேர்வு நடக்கிறது. இதேபோல் பெண்களுக்கான 2-ம்கட்ட உடல் தகுதி தேர்வு வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. அவர்களுக்கு 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் பந்து எறிதல் ஆகிய தேர்வு நடக்கிறது.
Related Tags :
Next Story