கொடைக்கானலில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்; விவசாயிகள் மனு
கொடைக்கானலில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்று ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் ஆர்.டி.ஓ. முருகேசனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெள்ளைப்பூண்டு பயிரிடப்படுகிறது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த வெள்ளைப்பூண்டினை சந்தைப்படுத்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் தேனி மாவட்டம் வடுகப்பட்டிக்கு கொண்டு சென்று அங்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப்பூண்டிற்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். மேலும் வெள்ளைப்பூண்டை நேரடியாக கொள்முதல் செய்ய கொடைக்கானலில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வேளாண்மை துறை சார்பில் பூண்டை பதப்படுத்தி பூண்டு ஊறுகாய், பூண்டு பொடி மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவை தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் உடனிருந்தார்.
Related Tags :
Next Story