பஸ் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பஸ் பயணிகளிடம் துண்டுபிரசுரம் வழங்கிய கலெக்டர் முரளிதரன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி கடந்த 3 நாட்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 4-வது நாளான நேற்று தேனி-மதுரை சாலையில் குன்னூர் சுங்கச்சாவடி அருகில் நெடுஞ்சாலை பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, நெடுஞ்சாலையில் பயணம் செய்த கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி முக கவசம் அணிவது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களையும் நிறுத்தி, பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.
அப்போது முக கவசத்தை சரிவர அணியாமல் இருந்த பொதுமக்களிடம், முக கவசத்தை முழுமையாக அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story