ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி


ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 4 Aug 2021 9:38 PM IST (Updated: 4 Aug 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

வெறையூர் அருகே குளிக்க சென்ற 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியானார்கள்.

வாணாபுரம்,

வெறையூர் அருகே குளிக்க சென்ற 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியானார்கள்.

குளிக்க சென்ற சிறுவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகன் தரணிதரன் (வயது 9), அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். 

அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் விக்னேஸ்வரன் (7). 3-ம் வகுப்பு படித்து வந்தான். வீரமணி மகன் வீரன் (4). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று காலை சிறுவர்களின் பெற்றோர் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அதே கிராமத்தில் வேலைக்கு சென்று இருந்தனர்.

அப்போது வீட்டில் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் 3 பேரும் அந்தப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்.

அவர்கள் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். 

வேலைக்கு சென்ற பெற்றோர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டில் சிறுவர்கள் இல்லாததால் அவர்களை தேடினர். 

ஏரியில் மூழ்கி பலி

அப்போது 3 சிறுவர்களும் ஏரியில் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கிராம மக்கள் வெறையூர் போலீஸ்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஏரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இது குறித்து வெறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story