திருப்பத்தூரை தூய்மையான மாவட்டமாக மாற்ற நடவடிக்கை. கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
திருப்பத்தூரை வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் தூய்மையான மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். முன்னதாக கலெக்டர் தலைமையில் கொரோனா தடுப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி வணிகர்கள் தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை கொரோனா பாதிக்காமல் இருக்க அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வியாபாரிகளும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அனைத்து வணிகர்களும் கடைகளுக்கு முன் கிருமிநாசினி வைத்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வணிகர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைத்து கடைகளிலும் சிவப்பு மற்றும் பச்சை நிற குப்பை தொட்டி வைத்து, பச்சை நிற தொட்டியில் மக்கும் பொருட்களையும், சிவப்பு நிற தொட்டியில் மக்காத பொருட்களையும் போடவேண்டும்.
தூய்மையான மாவட்டமாக
வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அரசின் வழிகாட்டுதல் படி கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அனைத்து வணிகர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் பி.அலர்மேல்மங்கை, திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் பி.ஏகராஜ், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் டி.சீனிவாசன், மண்டல தாசில்தார் ரேவதி, வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் உள்பட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story