ஜோலார்பேட்டை அருகே ராணுவவீரர் வீட்டில் ரூ.6½ லட்சம் நகை, பணம் திருட்டு
ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
ராணுவ வீரர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் அருகே உள்ள பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 45). ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிவகாமி (33). இவர்களுடைய மகன்கள் உள்பட மூன்று பேரும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சிவகாமி பந்தரபள்ளியில் உள்ள தனது தாயார் வீட்டில் நந்த பிறந்தநாள் விழாவுக்காக நேற்று காலை 8 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். மாலை 4 மணி அளவில் சிவகாமியின் உறவினரான சரவணன், சிவகாமியின் வீட்டு வழியாக சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சிவகாமிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ரூ.6½ லட்சம் நகை, பணம் திருட்டு
அதன்பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கேட் மற்றும் முன்கதவு இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாமி ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் தடங்களை சேகரித்தனர். தொடர்ந்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப்போன நகா, பணத்தின் மதிப்பு ரூ.6½ லட்சம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story