கொரோனா விழிப்புணர்வு அச்சிடப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கல்
கொரோனா விழிப்புணர்வு அச்சிடப்பட்ட ஸ்மார்ட் கார்டு பாதுகாப்பு உறை வழங்கப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்ட வழங்கல் துறை சார்பாக மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் படங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு பாதுகாப்பு உறை வழங்கும் நிகழ்ச்சி நேற்று தாந்தோணி பகுதியில் உள்ள ேரஷன் கடையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பாதுகாப்பு உறைகளை வழங்கி, மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 25 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும் உறைகளை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 3-வது அலையை தடுப்பதற்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்ற செயல்களை செய்தாலே பாதுகாத்துக்கொள்ளலாம். இதனை பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வரும் மின்னணு குடும்ப அட்டைகளை பாதுகாக்கும் வகையிலும், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு வாசகங்களுடன் ஸ்மார்ட் கார்டு பாதுகாப்பு உறை தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இந்த உறையின் மீது கொரோனா கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள், குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிப்பட்டி கோட்டை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி மையத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்தல், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
Related Tags :
Next Story