திருவெண்ணெய்நல்லூர் அருகே மலட்டாற்றில் உடல் கருகிய நிலையில் பெண் பிணம் போலீஸ் தீவிர விசாரணை
திருவெண்ணெய்நல்லூர் அருகே மலட்டாற்றில் உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சேமங்கலம் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் மலட்டாற்றில், நேற்று அந்த பகுதியை சேர்ந்த சிலர் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றனர்.
அப்போது, ஆற்றில் தீ வைத்து எரிக்கப்பட்டு, உடல் கருகிய நிலையில் பிணம் ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள்
திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
தடயங்கள் சேகரிப்பு
அப்போது, எரிந்த நிலையில் கிடந்தவரின் கையில் வளையல்கள் கிடந்தன. மேலும் அருகே ஒரு தடி, விஷ பாட்டில், செல்போன், கைப்பை, சீப்பு, செயின், சாவி மற்றும் காலணிகளும் கிடந்தன.
இதன் மூலம் பிணமாக கிடந்தவர் சுமார் 30 வயதுடைய பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தடயவியல் நிபுணர் ராஜீவ் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தார்.
பின்னர், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கொலையா?
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கடத்தி வந்து கொலை செய்து தீ வைத்து எரிந்து கொன்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story