குழந்தைகள் ஆரோக்கியம்-அறிவுடன் வளர்வதற்கு தாய்ப்பால் அவசியம் கலெக்டர் விசாகன் அறிவுரை
குழந்தைகள் ஆரோக்கியம்-அறிவுடன் வளர்வதற்கு தாய்ப்பால் அவசியம் என்று கலெக்டர் விசாகன் கூறினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் விசாகன் கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடந்தது.
இதில் கலெக்டர் விசாகன் கலந்து கொண்டு பேசுகையில், குழந்தைகளின் வளர்ச்சி, ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் தாய்ப்பாலில் இருக்கிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது, தாயின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. எனவே குழந்தை பிறந்ததில் இருந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் தாய்ப்பாலுடன், ஊட்டச்சத்து உணவு கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகள் மிகவும் அறிவு, ஆரோக்கியத்துடன் வளர்வார்கள், என்றார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் இடம்பெற்ற கண்காட்சி நடந்தது. அதில் சத்துகள் நிறைந்த தானியங்களில் தயாரான உணவுகள், காய்கறிகள், பழங்கள் இடம்பெற்று இருந்தன. இதனை கலெக்டர் பார்வையிட்டார். இதில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story