ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ்?. சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்.


ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ்?. சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்.
x
தினத்தந்தி 4 Aug 2021 10:54 PM IST (Updated: 4 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பரவி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வதந்தி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

டெல்டா பிளஸ் வைரஸ்

இந்தியாவில் மராட்டிய மாநிலம், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு உள்ளது. மக்கள் மத்தியில் இந்த வகை வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் வேலூரை அடுத்த அரியூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வதந்தி

அரியூரை சேர்ந்த ஆசிரியர் மற்றும் அவரின் மனைவி மற்றும் 2 மகன்கள் ஆகியோருக்கு கடந்த வாரம் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இந்த தகவலை சிலர் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை ஆய்வு மையம் பெங்களூரு மற்றும் புனேவில் தான் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 30 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனைக்கு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியது. அதில் யாருக்கும் அந்த வகை வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவியதாக வரும் தகவல் வதந்தி. யாரும் அதை நம்ப வேண்டாம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story