கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி,
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சோதனை
பொள்ளாச்சி அமைதி நகரில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கார் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் காரின் பின்பக்க கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது காருக்குள் மூட்டை, மூட்டையாக அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடத்த முயன்றது யார்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. 20 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணை
இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் பிரிவு போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் காருடன் ரேஷன் அரிசி மூட்டைகளை கிழக்கு போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதிவு எண்ணை வைத்து யாருக்கு சொந்தமான கார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அமைதி நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதற்கிடையில் தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபர் கைது
இதேபோல அம்பராம்பாளையம் வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அஜ்மல் (வயது 20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பிடிபட்ட அஜ்மல் மற்றும் காருடன் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். ஒரே நாளில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
Related Tags :
Next Story