ஓராண்டுக்கு பின்பு இயக்கப்பட்ட திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரெயில்
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் சுமார் ஓராண்டு காலத்திற்கு பின்பு நேற்று முதல் திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர் இல்லாததால் ரெயில் ஆங்காங்கே நின்று செல்ல வேண்டிய நிலை இருந்தது.
காரைக்குடி,ஆக
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் சுமார் ஓராண்டு காலத்திற்கு பின்பு நேற்று முதல் திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர் இல்லாததால் ரெயில் ஆங்காங்கே நின்று செல்ல வேண்டிய நிலை இருந்தது.
திருவாரூர்-காரைக்குடி ரெயில்
காரைக்குடி-திருவாரூர் இடையேயான ரெயில் பாதையை அகல பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2008-2009ம் ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் இயங்கிய ரெயில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அகல ரெயில் பாதை பணிகள் தொடங்கி நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.
ஆனால் இந்த வழித்தடத்தில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் புதிய கேட் கீப்பர் நியமிக்கப்படாததால் இந்த ரெயில் அந்தந்த கேட் பகுதியில் நின்றது. பின்னர் அந்த ரெயிலில் இருந்து இறங்கி வந்து மொபைல் கீப்பர் கேட்டை அடைத்துவிட்டு மீண்டும் ரெயிலை இயக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் காரைக்குடி-திருவாரூர் இடையேயான சுமார் 148 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க இந்த ரெயில் சுமார் 6 மணி நேரம் பயணிக்க வேண்டியது இருந்தது. இதனால் ரெயில் பயணிகள் அதிருப்தியடைந்து ரெயில் பயணத்தை தவிர்த்து வந்தனர்.
போதிய பயணிகள் இல்லாததாலும், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும் கடந்த ஆண்டு இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் இந்த ரெயில் சேவை தொடரும் என்று தென்னக ரெயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டது.
ரெயில்வே கேட் கீப்பர்
இதையடுத்து 6 பெட்டிகளுடன் திருவாரூரில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில் மதியம் 2.35 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையம் வந்தடைந்தது. அதன் பின்னர் மீண்டும் 3 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து திருவாரூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
ஆனால் இந்த ரெயிலில் போதிய அளவு பயணிகள் பயணம் செய்யாததால் ரெயில் பெட்டிகள் காலியாகவே இருந்தன. மேலும் திருவாரூர்-காரைக்குடி இடையே சுமார் 74 ரெயில்வே கேட் பகுதிகள் உள்ளன.
இதில் ஒரு சில கேட் பகுதிகளில் மட்டும் கீப்பர் உள்ள நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மற்ற ரெயில்வே கேட் பகுதிகளில் கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட வில்லை. இதனால் அந்தந்த கேட் பகுதிக்கு இந்த ரெயில் வந்ததும் அங்கு சிறிது நேரம் நிறுத்தி விட்டு அந்த ரெயிலில் இருந்து இறங்கி வந்த மொபைல் கீப்பர் கேட்டை அடைத்து விட்டு மீண்டும் ரெயில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கோரிக்கை
இதனால் காரைக்குடியில் இருந்து திருவாரூக்கு 4 மணி நேரத்தில் செல்ல வேண்டிய இந்த ரெயில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
எனவே புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே கேட் பகுதியில் கேட் கீப்பர்களை நியமனம் செய்ய தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story