விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரம்


விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 4 Aug 2021 11:40 PM IST (Updated: 4 Aug 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோவை,

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைக ளில் கரைக்கப்படும். இந்த ஆண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. 

கொரோனா பரவல் காரணமாக ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. இதனால் 1 அடி உயரம் மற்றும் அதற்கும் சிறிய விநாயகர் சிலைகள் மட்டும் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் விநாயகர் சிலை விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்த விநாயகர் சிலை செய்பவர்கள் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் ½ அடி முதல் 12 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் தயாரிப்பது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

ஏற்கனவே தயார் செய்த சிலைகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கியது. தற்போது பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதால், கோவில்கள் மற்றும் கடைகள் திறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. 

வழக்கமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு லட்சம் வரை சிறிய விநாயகர் சிலை தயாரிப்போம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக 10 ஆயிரம் சிலைகள் கூட தயாரிக்க வில்லை. பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்க வில்லை. 

இதன்காரணமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.  பலர் வேலை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story