மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பர்னிச்சர் கடை உரிமையாளர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பர்னிச்சர் கடை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 4 Aug 2021 11:40 PM IST (Updated: 5 Aug 2021 6:12 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி பி.ஏ.பி. காலனியை  சேர்ந்தவர் விவேகானந்தசாமி (வயது 51). இவருக்கு ராஜேஸ்வரி (45) என்ற மனைவியும், அபிநந்தனா என்ற மகளும், விக்ரம் கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். விவேகானந்தசாமி பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் சொந்தமாக பர்னிச்சர் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவேகானந்தசாமி மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்றார். கிணத்துக்கடவு மேம்பாலத்தில் அரசம்பாளையம் பிரிவு பகுதியில் விநாயகர் கோவில் அருகே வந்தபோது, 4 வழிச்சாலையை ஒருவர் கடக்க முயன்றார்.  அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க, விவேகானந்தசாமி பிரேக் போட்டார்.

இதில், விவேகானந்தசாமி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விவேகானந்தசாமி நேற்று காலை பரிதாகமாக இறந்தார். 

Next Story