மருந்தாளுநர் பணிக்கான நேர்காணல் திடீர் ரத்து
கடலூர் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய மருந்தாளுநர் பணிக்கான நேர்காணல் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் நேர்காணலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென ரத்து செய்தார்.
கடலூர்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட நலக்குழுமம் சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா அவசரகால மருத்துவ சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாதம் பணியாற்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது ஆய்வக நுட்புநர், மருந்தாளுநர், ரேடியோகிராபர் ஆகிய பணியிடங்களுக்கு 73 பேரை தேர்ந்தெடுக்க ஆகஸ்டு 4-ந் தேதி (அதாவது நேற்று) கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நேர்காணல்
அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 8 மணிக்கே இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வர தொடங்கினர். காலை 10 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து மருத்துவ பணிகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு நேர்காணல் நடத்தினர். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேர்காணலை ஆய்வு செய்வதற்காக வந்தார்.
ரத்து செய்த கலெக்டர்
அப்போது கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அமர வைக்கப்பட்டிருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த கலெக்டர், அதிகாரிகளிடம், தற்போது நேர்காணல் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டார். மேலும் அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள், நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
பின்னர் நேர்காணலுக்கு வந்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள், நேர்காணல் நடைபெறாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story