நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி


நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Aug 2021 1:04 AM IST (Updated: 5 Aug 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 

4-ம் திருவிழாவான நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகிற வைபவம் நடந்தது. 

பகல் 11.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது மேளதாளம் முழங்க அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. பின்னர் அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  கொரோனா பரவல் காரணமாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கட்டளைதாரர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவிலுக்கு வெளியே அம்மன் சன்னதி முன்பு ஏராளமான பெண்களும், பக்தர்களும் வளைகாப்பு நிகழ்ச்சியை பார்த்து தரிசனம் செய்தனர்.

வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 10-ம் நாள் விழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து உள்ளனர்.

Next Story