கொரோனா தடுப்பூசி; நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு 2-வது இடம்
மாநிலத்தில் ெபாதுமக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி 2-வது இடம் பிடித்தது.
நெல்லை:
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் என 84 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் முதல் தவணையாக ஏராளமான பொதுமக்கள் நெல்லை மருத்துவக்கல்லூரியில் கோவேக்சின் தடுப்பூசியை அதிக அளவில் போட்டனர். ஆனால் தற்போது 2-வது தவணை போடுவதற்கு கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த வாரம் முதல் மீண்டும் கோவேக்சின் தடுப்பூசி வரத்தொடங்கியது. இதனால் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் தற்போது 2-வது தவணையும் போட்டு வருகிறார்கள்.
நேற்று நெல்லை மாவட்டத்திற்கு 4 ஆயிரத்து 50 கோவேக்சின் தடுப்பூசி வந்தது. நெல்லை மருத்துவக்கல்லூரி மையத்தில் மட்டும் 1,480 தடுப்பூசிகளும், மற்ற இடங்களுக்கு மீதி தடுப்பூசிகளும் பிரித்து வழங்கப்பட்டன. நேற்று காலையில் இருந்தே 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி பொதுமக்கள் போட்டுச் சென்றனர். மேலும் விருப்பப்பட்டவர்களுக்கு முதல் தவணை கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 13 ஆயிரத்து 140 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மையத்தில் 960 கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படத்துள்ளது. இதனால் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.
Related Tags :
Next Story