ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2021 2:24 AM IST (Updated: 5 Aug 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ரெயில் என்ஜினில் சிக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றது.

நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ரெயில் என்ஜினில் சிக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றது.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரெயில் முன் பாய்ந்தார்
பெங்களூருவில் இருந்து தினமும் காலை நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று காலை வழக்கம் போல நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழிக்கும், நாகர்கோவிலுக்கும் இடையே ராஜாவூர் ரெயில்வே கேட் அருகே வந்த போது வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவரது உடல் ரெயில் என்ஜினின் முன் பகுதியில் சிக்கிக் கொண்டது.
இதனால் உடலானது தண்டவாளத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. அப்போது, ரெயில் என்ஜினில் வாலிபர் உடல் சிக்கி கொண்டதை டிரைவர் கவனித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். பின்னர் இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடல் மீட்பு
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த வாலிபரின் உடலை மீட்டனர். ரெயில் இழுத்து வந்ததால் உடல் மிகவும் சேதம் அடைந்து இருந்தது. இதனையடுத்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
முதலில் பிணமாக கிடந்தது யாா்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. பின்னர் ரெயில் முன் வாலிபர் பாய்ந்த இடத்துக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.
திருப்பூரை சேர்ந்தவர்
அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஆவணங்களை பரிசோதித்த போது தற்கொலை செய்து கொண்டவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. 
மேலும் அந்த நபர் திருப்பூர் மாவட்டம் பட்டத்திபாளையம் கருப்பன்விளக்கு பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 23) என்ற தகவலும் வெளியானது.
தற்கொலை செய்து கொண்ட பிரவீன் குமார், தந்தையின் உதவியுடன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நாகர்கோவிலில் அவருடைய உறவினர்கள் இருப்பதால் அவர்கள் மூலமாக இங்கும் பலருக்கு கடன் வழங்கி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கடந்த 7 மாதங்களாக நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து நிதி நிறுவன பணியை பிரவீன் குமார் செய்து வந்துள்ளார்.
போலீஸ் விசாரணை
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்ட பிரவீன் குமார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 
இதைத் தொடா்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story