சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி


சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Aug 2021 2:31 AM IST (Updated: 5 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார்.

சிவகிரி:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ராஜசிங்கப்பேரி கண்மாய்க்கு வடபுறத்தில் உள்ள ஒத்தசடைச்சியம்மன் கோவில் அருகே இவருக்கு வயல் உள்ளது. அதில் மரவள்ளிக்கிழங்கு விவசாயம் செய்து வருகிறார்.

மலையடிவார பகுதியில் வயல் அமைந்திருப்பதால் மரவள்ளிக்கிழங்கை காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து அழித்து நாசம் செய்து வந்தன. இதனை தடுக்க கணேசன் அனுமதியின்றி வயலை சுற்றி மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அவரது வயலுக்கு அருகே தனியாருக்கு சொந்தமான வயல் உள்ளது. அந்த வயலில் சிவகிரி அண்ணா வாழையடி தெருவை சேர்ந்த தங்கமலை (45) என்பவர் விவசாய கூலி வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று இரவு கணேசன் தோட்டத்தில் நண்பரை பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்வேலிகம்பியில் அவரது கால் பட்டது. இதில் தங்கமலை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  தங்கமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணேசனை கைது செய்தனர்.

இறந்து போன தங்கமலைக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், காவியா (19), சித்ரா (15) ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

Next Story