வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது


வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது
x
தினத்தந்தி 5 Aug 2021 3:11 AM IST (Updated: 5 Aug 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில், அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போனதாக நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில், அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போனதாக நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.

காதல் திருமணம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அருகே வசித்து வந்தவர் கார்த்திக்(வயது 25). இவரது மனைவி ரஞ்சிதா(24). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு இருந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கார்த்திக்கின் சொந்த ஊர் மண்டியா ஆகும். சாம்ராஜ்பேட்டையில் தனது நண்பர் சஞ்சீவ் வீட்டில் அவர் தன்னுடைய மனைவியுடன் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி தனது கணவர் கார்த்திக்கை காணவில்லை எனக்கூறி கே.ஜி.நகர் போலீஸ் நிலையத்தில் ரஞ்சிதா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்த போது கடைசியாக நண்பர் சஞ்சீவ், மனைவி ரஞ்சிதாவுடன் பேசியது தெரியவந்தது.

மனைவி கைது

மேலும் கணவர் காணாமல் போன பின்பு கூட, அவரது நண்பர் சஞ்சீவுடன் ரஞ்சிதா பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் ரஞ்சிதாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, விசாரணைக்கு ஆஜராக ரஞ்சிதாவுக்கு போலீசார் உத்தரவிட்டனர். அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ரஞ்சிதா, சஞ்சீவுடன் வந்திருந்தார்.

இதையடுத்து, ரஞ்சிதா மற்றும் சஞ்சீவிடம் போலீசார் விசாரித்தனர். முதலில் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தனது கள்ளக்காதலன் சஞ்சீவுடன் சேர்ந்து கணவர் கார்த்திக்கை கொலை செய்து விட்டதாக ரஞ்சிதா கூறினார். இதையடுத்து, கார்த்திக்கை கொலை செய்ததாக ரஞ்சிதா, சஞ்சீவ், இவர்களுக்கு உதவியதாக சஞ்சீவ் நண்பர் சுப்பிரமணியாவை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கள்ளத்தொடர்பு

அதாவது கார்த்திக்கும், ரஞ்சிதாவும் காதலித்து திருமணம் செய்த பின்பு, அவர்களுக்கு தேவையான உதவிகளை சஞ்சீவ் செய்து கொடுத்ததுடன், தன்னுடைய வீட்டிலேயே அவர்களை தங்க வைத்துள்ளார். அப்போது ரஞ்சிதாவுடன் சஞ்சீவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திக் இல்லாத நேரத்தில் ரஞ்சிதாவும், சஞ்சீவும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களது கள்ளத்தொடர்புக்கு கார்த்திக் இடையூறாக இருந்துள்ளார்.

 இதையடுத்து, அவரை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி கார்த்திக்கிற்கு, சஞ்சீவ் மதுபானம் வாங்கி கொடுத்துள்ளார். குடிபோதையில் இருந்த கார்த்திக்கை தனது நண்பர் சுப்பிரமணியாவுடன் சேர்ந்து ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவுக்கு சஞ்சீவ் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து கார்த்திக்கை 2 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.

ஆற்றில் உடல் வீச்சு

பின்னர் கார்த்திக் உடலை ராஜராஜேசுவரிநகர் அருகே விருஷாபாவதி ஆற்றில் சஞ்சீவ், சுப்பிரமணியா வீசி உள்ளனர். இதுபற்றி ரஞ்சிதாவுக்கு சஞ்சீவ் தகவல் தெரிவித்திருந்தார். கணவர் கொலை செய்யப்பட்ட பின்பு கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரஞ்சிதா பல இடங்களுக்கு சுற்றி திரிந்ததாக தெரிகிறது. மேலும் கணவர் காணாமல் போய் விட்டதாக கூறி கே.ஜி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, சஞ்சீவ் கொடுத்த தகவலின் பேரில் விருஷாபாவதி ஆற்றில் இருந்து அழுகிய நிலையில் கார்த்திக்கின் உடல் மீட்கப்பட்டது. கைதான ரஞ்சிதா உள்பட 3 பேர் மீதும் கே.ஜி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story