போலீஸ் நிலையத்தில் ஆப்பிரிக்க வாலிபர் சாவு; சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்
பெங்களூருவில், போலீஸ் நிலையத்தில் ஆப்பிரிக்க வாலிபர் பலியான விவகாரத்தில் சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கைதான ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில், போலீஸ் நிலையத்தில் ஆப்பிரிக்க வாலிபர் பலியான விவகாரத்தில் சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கைதான ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியது அம்பலமாகி உள்ளது.
தனிப்படை தீவிரம்
பெங்களூரு ஜே.சி.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போதைப்பொருள் விற்றதாக ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோயில் மலு என்ற ஜான் கடந்த 2-ந் தேதி உயிர் இழந்தார். அவர், உடல் நலக்குறைவு காரணமாக உயிர் இழந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அவரை, போலீசார் அடித்து கொலை செய்திருப்பதாக ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் போலீசார் மீது ஆப்பிரிக்க வாலிபர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதுகுறித்து ஜே.சி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசாரை தாக்கியதாக ஆப்பிரிக்காவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு பெண் உள்பட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், அவர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
போதைப்பொருள் பயன்படுத்தினார்
இதற்கிடையில், கைதான 5 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளார்களா? என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் மட்டும் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது அம்பலமானது. அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் போலீஸ் நிலையத்தில் ஆப்பிரிக்க வாலிபர் பலியாகி இருந்ததால், அதுகுறித்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஜே.சி.நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, ஆப்பிரிக்க வாலிபரை கைது செய்து விசாரித்த போலீசாரிடம் விசாரித்து, சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தகவல்களை பெற்றுக் கொண்டனர்.
சி.ஐ.டி. போலீசார் விசாரணை
மேலும் கடந்த 2-ந் தேதி ஜே.சி.நகர் போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்தார்கள். அத்துடன் ஆப்பிரிக்க வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடமும், போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஆப்பிரிக்க வாலிபர் சாவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப தகவல்களும் திரட்டப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம், என்றார்.
Related Tags :
Next Story